"மரம் வெட்ட ஆள் கிடைக்கவில்லை" - பட்டுப்போன மரத்தை அகற்றுவதற்கு பதிலளித்த மானாமதுரை நெடுஞ்சாலைத்துறை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி ஆணையாளர் கோபாலகிருஷ்ணன், மானாமதுரை நெடுஞ்சாலைத்துறை உதவி போட்டோ பொறியாளருக்கு பொதுமக்கள் நலன் சார்ந்த பரிந்துரை கடிதத்தை அளித்துள்ளார். அதில் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்.5 சிவகங்கை ரஸ்தா பகுதியில் அனுசியா திருமண மஹால் அருகில் நெடுஞ்சாலைத்துறை சாலையின் இடதுபுறம் அமைந்துள்ள பெரிய மரம் காய்ந்து, பட்டுப்போய் அதன் கிளைகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தினை அகற்றிட பரிந்துரைத்துள்ளார்.
ஆனால் தற்போது வரை சுமார் மூன்று வாரங்களாக நாள் கடத்திக் கொண்டே வரும் நெடுஞ்சாலைத்துறை இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் தற்போதுவரை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் இது குறித்து சிலர் நெடுஞ்சாலைத்துறை அலுவலரிடம் கேட்டபோது "மரம் வெட்ட ஆள் கிடைக்கவில்லை" என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். மரத்தின் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து மாணவிகள் சாலையில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்வார்கள்.
அச்சமயம் பட்டுப்போன நெடுஞ்சாலைத்துறை மரத்தினால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு, ஆணையாளரின் கடிதம் மூலமாக பொதுமக்கள் சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், இத்தகைய பதிலை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்திருக்கிறதோ அம்மரம் என்று வேதனை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment