விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை உழவர் சந்தைகளில் வந்து விற்பனை செய்து பயன் அடையுமாறு வேளாண் துணை இயக்குனர் அழைப்பு - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 January 2026

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை உழவர் சந்தைகளில் வந்து விற்பனை செய்து பயன் அடையுமாறு வேளாண் துணை இயக்குனர் அழைப்பு

 


விவசாயிகள் தாங்கள்  விளைவிக்கும் பொருள்களை  உழவர்  சந்தைகளில்  வந்து  விற்பனை செய்து பயன் அடையுமாறு வேளாண் துணை இயக்குனர் அழைப்பு. 


தமிழகத்தில்  விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே  நேரடி  சந்தைப்படுத்தலை ஊக்குவிக்க கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உழவர்  சந்தை திட்டத்தை தொடங்கி  வைத்தது.சிவகங்கை உழவர் சந்தை 22.02.2000 அன்று அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்  அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது. உழவர் சந்தையின் முக்கிய நோக்கம்  விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும்,  நுகர்வோர்களுக்கு தரமான  பொருட்களை, நியாயமான விலையில் வழங்குவதும்  ஆகும். 

மொத்த விலையை விட 20 சதவீதம் கூடுதலாகவும், சில்லறை விலையை விட 15 சதவீதம் குறைவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு  நாளைக்கு   சராசரியாக 38.19  மெட்ரிக் டன்  காய்கறிகள்,பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றது. 

தினந்தோறும் 50 லிருந்து 81 விவசாயிகள் பயனடைந்து  வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு 2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 13.9 ஆயிரம் மெட்ரிக் டன்கள் காய்கறிகள், பழங்கள் ரூ.56 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.  உழவர்  சந்தைகளில்  காய்கறிகள்,  பழங்கள் மட்டும் இன்றி சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர்  நிறுவனங்களால் மதிப்பு  கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு  கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. உழவர் சந்தைகளில்  விலை விவரம், வேளாண்மை சார்ந்த அரசின் திட்டங்கள்  குறித்து டிஜிட்டல்  போர்டுகள்  வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் துல்லியமாக  எடை  போடும் வகையில்  விவசாயிகளுக்கு  நவீன எலக்ட்ரானிக்  தராசுகள்  வழங்கப்பட்டுவருகிறது. மேலும் விவசாயிகள் தங்கள் காய்கறிகள், பழங்கள்  அழுகாமல்   பாதுகாக்க  சிவகங்கை உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கு உள்ளது.விவசாயிகள்  தங்கள்  தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை   விற்பதற்கு  எலக்ட்ரானிக்  தராசு  மற்றும் குளிர்பதன கிடங்கு  முழுவதுமாக இலவசமாக   வழங்கப்படுகின்றது. 

விவசாயிகளுக்கு வாரந்தோறும், கிராமங்கள்  வாரியாக சென்று வேளாண்மை அலுவலர்கள்  ,உதவி  வேளாண்மை அலுவலர்கள்  மற்றும்  உதவி  தோட்டக்கலை அலுவலர்களால்  விழிப்பணர்வு  முகாம்கள்  நடத்தப்பட்டுவருகின்றது.

விவசாயிகள் தாங்கள்  விளைவிக்கும் பொருள்களை  உழவர்  சந்தைகளில்  வந்து விற்பனை செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நுகர்வோர்களும்  சுத்தமான  காய்கறிகள், பழங்களை  நியாயமான விலைக்கு உழவர் சந்தைகளில் வாங்கி பயனடையுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது  என்று சிவகங்கை வேளாண்மை மற்றும் வாணிக துணை இயக்குநர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad