பத்திரிக்கையாளர்களுக்கு பயிலரங்கம் என்று அழைத்து அவமானப்படுத்திய சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய அரசு பத்திரிகை தகவல் பணியகம் (PIB) பத்திரிகையாளர்களுக்கு நடத்தும் பயிலரங்கில் கலந்துகொள்ள, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பியது.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் டாக்டர் அப்துல்கலாம் குளிரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி பட்டறைக்கு வருகை தந்திருந்த பத்திரிகையாளர்களை சரிபார்க்க, சிக்ரி நுழைவாயில் முகப்பிலும், அரங்க நுழைவாயிலிலும் செய்தியாளர்களின் பெயர், ஊடகத்தின் பெயர், தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்பட்டபிறகே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
அரங்கத்திற்குள் நுழைந்த செய்தியாளர்களுக்கு 20 நபர்களுக்கு மட்டும் ஒரு பிளாஸ்டிக் ஃபைலில் நோட்பேட் மற்றும் பேனா வைத்து கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு உள்ளே எதுவும் இல்லாமல் வெறும் ஃபைல் மட்டும் கொடுத்ததால் அவர்கள் ஃபைலை திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் தேநீர் இடைவேளையில் 25 நபர்களுக்கு மட்டுமே தேநீர் மற்றும் நொறுவல் வழங்கப்பட்டது. மற்றவர்கள் வரிசையில் நின்று ஏமாந்தனர். இடைவேளை முடிந்து பயிலரங்கம் ஆரம்பித்த பிறகு தேநீர் உள்ளது சென்று பருகி வாருங்கள் என அழைத்தார்கள் பலர் செல்லவில்லை.
பயிலரங்கில் மத்திய அரசின் ஜிஎஸ்டி 2.O பற்றிய விளக்கங்கள் முடித்ததும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியவர்கள், கேள்விகள் கேட்ட செய்தியாளரை 'நீங்கள் எந்த பத்திரிகை?' எனக்கேட்டு மேலும் பரபரப்பை அதிகப்படுத்தினர்.
அந்த இடத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டவுடன் அவற்றிலிருந்து விடுபட உணவு இடைவேளை அறிவித்தனர். சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே இடத்தில் வைத்து பரிமாறப்பட்டதால் பலர் உணவருந்தாமலும், பயிலரங்கில் கலந்துகொள்ளாமலும் பாதியிலே வீட்டுக்குச் சென்றுவிட்டனர். உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய நிகழ்ச்சியில், பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டமைக்காக, பத்திரிகையாளர்களுக்கு, பங்கேற்புச் சான்றிதழ் கொடுத்து நிறைவு செய்தனர்.
அதிலும், கலந்துகொண்ட பலருக்கு சான்றிதழ் அளிக்காமல், குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்வு செய்து மேடையேற்றியதோடு, அரங்கினுள் இல்லாதவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழைத்தனர். அரங்கினுள் இருந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழைப்பு இல்லை. இதனால், பத்திரிகையாளர்கள் மற்றும் நிருவாகத்தினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
தொடக்கம் முதல் இறுதிவரை, எந்த திட்டமிடலும் இல்லாமலும் குறிப்பிட்ட நபர் மற்றும் குறிப்பிட்ட பத்திரிகை சார்ந்த செய்தியாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும். மற்ற அனைவரும் அவமதிக்கப்பட்டதாகவே உணர்ந்து, கேள்விகள் கேட்டதால் நிருவாகத்தினர் மழுப்பலான பதில் கூறி அனைவரையும் கலைந்து போகவைத்தனர். அதனால் கடைசிவரை சலசலப்பு மட்டுமே மிஞ்சியது. பத்திரிகையாளர் பயிலரங்கம் பத்திரிக்கையாளர் அவமதிப்பு நிகழ்ச்சியாகவே முடிந்தது.
No comments:
Post a Comment