"உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளை முற்றாக புறக்கணித்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு காத்திருப்பு போராட்டம்.
'வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு' சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள வருவாய்த்துறையினர் வருவாய் அலுவலகங்களில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளை முற்றாக புறக்கணித்து அனைத்து மாவட்ட மற்றும் வட்டங்களில் உள்ள தலைநகரங்களில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி "காத்திருப்பு போராட்டம்" மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிவகங்கை மாவட்ட மையம் சார்பாக, மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றாக புறக்கணித்து, ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக 1. உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய அவகாசம் வேண்டும், ஆய்வு கூட்டத்தின் மூலம் பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும், திட்ட முகாம்களை குறைக்க வேண்டும், இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
2. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை ஊழியர்களுக்கான 'சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம்' இயற்ற வேண்டும்.
3. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.
4. களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் கிழக்குகள் நிர்ணயிக்கப்படுவதை கைவிட வேண்டும்.
5. அனைத்து அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
6. அரசு பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உத்தவரம்பு 5 சதவீத என நிர்ணயித்துள்ளது ரத்து செய்து, ஏற்கனவே இருந்த 22 சதவீதம் வழங்கிட வேண்டும்.
7. வெளிமுகமை, ஒப்பந்தம், தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமாலைகளை முழுமையாக கைவிட வேண்டும்.
8. கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்த்தி வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரிய விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
9. ஒவ்வொரு வருடமும் ஜூலை ஒன்றாம் தேதி (பசலி ஆண்டின் தொடக்கம்) வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை இந்த காத்திருப்பு போராட்டத்தின் மூலமாக தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment