மானாமதுரை சிப்காட் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை மாபெரும் முற்றுகை போராட்டம், போலீசாருடன் தள்ளுமுள்ளு, பேச்சுவார்த்தை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில், 13 மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை கொண்டுவந்து, சுத்திகரிப்பு என்ற பெயரில் எரியூட்டபட உள்ளன. இதனால் வெளியேற்றப்படும் நச்சு புகையால் சுற்று சூழல் மாசு ஏற்பட்டு மூச்சுத்தினறல் ஏற்படும். ரசாயனம் கலந்த கழிவு நீரால் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடும், நீர் நிலைகள் மாசுபட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலையும். சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள மானாமதுரை மற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறி விடும் அபாயம் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஏ. முக்குளம் என்ற கிராமத்தில் இம்மாதிரியான ஆலையில் வெளியேற்றிய நச்சுக் காற்றால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு, பெண் கருச்சிதைவு, சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மேலும் பல பெண்கள் கணவனை இழந்து வாழும் நிலை தொடர்கிறது. அந்த பகுதி மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த ஆலை மூடப்பட்டது.
ஏ. முக்குளம் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டம், மானாமதுரை பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்படாமல் மானாமதுரை பகுதி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, உடல் நலத்தையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் நச்சு ஆலையின் அனுமதியை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி, செப்டம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் மானாமதுரை தாலுகா அலுவலகம் எதிரில் மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் துவங்க உள்ள மருத்துவ கழிவு விசவாயு ஆலையை தடுத்து நிறுத்த கோரி நடைபெறும் இந்த மாபெரும் முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக மானாமதுரை வியாபாரிகள் சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நகர் வியாபாரிகள் சங்கம், மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்கம், ஹோட்டல் பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்கம், மானாமதுரை விநியோகஸ்தர்கள் சங்கம், திருமுருகன் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம், பழைய பேருந்து நிலைய காய்கறி, பழங்கள் மற்றும் பூ வியாபாரிகள் சங்கம், புதிய பேருந்து நிலைய காய்கறி, பழங்கள் மற்றும் பூ வியாபாரிகள் சங்கம், அனைத்து ஆட்டோ சங்கங்கள், அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை, மருந்து வணிகர்கள் சங்கம், எலக்ட்ரிசியன் & பிளம்பிங் வேலை பார்ப்போர் நலச்சங்கம், மருத்துவர் நலச்சங்கம், பந்தல், ஒலி & ஒளி அமைப்பாளர் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர், அனைத்து கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும் சிப்காட் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, வணிகர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டதால் மானாமதுரை பகுதியில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நடைபெற்ற இந்த மாபெரும் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக் குழுவினர் தாலுகா அலுவலகத்திலிருந்து சிப்காட் வளாகத்திற்குள் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலய நோக்கி சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தியதில் போராட்டக் குழுவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை அடுத்து உடனடியாக மானாமதுரை வட்டாட்சியர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்களை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் விரைந்தார். தொடர்ச்சியாக போலீஸாரின் தடுப்பு வேலிகளை தகர்த்து 500க்கும் மேற்பட்ட போராட்ட குழுவினர் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட சென்றதாலும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் அளவு போராட்டம் தொடரும் என்று கூறியதால், நிலைமை கைமீறி போவதையடுத்து மேலும் பாதுகாப்பு படையினரை வரவழைக்க போலீசார் உத்தரவிடதாலும் அப்பகுதியில் சில மணி நேரம் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக போராட்டக் குழுவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பேச்சுவார்த்தையை அடுத்து மருத்துவ சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதோடு, நிரந்தர தடைக்கான உத்தரவு 2 மாதங்களில் அரசிடமிருந்து பெறப்படும் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, போராட்ட குழுவினர் களைந்து சென்றனர்.

No comments:
Post a Comment