பட்டியலின மக்கள் வாழும் பகுதி என்பதால் அடிப்படை வசதிகளை செய்துதர மறுக்கும் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணி அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 400 குடும்பங்களுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி பலமுறை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் பிடிஓ மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து தங்களை புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறுகையில், "மூங்கில் ஊரணி அம்பேத்கர் நகரின் பிரதான சாலை 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்பிறகு இன்று வரை சாலையை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் முன்னெடுக்கவில்லை. இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் சரியாக எரியவில்லை. மழை காலங்களில் இக்குறிப்பிட்ட சாலையானது சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றது. வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், மனவேதனைக்கும், பெரும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். சேறும் சகதியுமான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றது வாடிக்கையாக்கி வருகிறது.
இதனால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தாய்த் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ச. அ. செல்வம் அவர்களின் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய தார் சாலை அமைக்க வழியுறுத்தி மனு கொடுத்தனர். அம்மனுவினை அலட்சியமாக பெற்றுக் கொண்ட பிடிஓ இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிடிஓ அவர்கள் சாதிய எண்ணத்துடனும், பாரபட்சமாக செயல்படுவதாகவும் அவரின் நடவடிக்கையில் இருந்து தெள்ளத் தெளிவாக தெரிவதாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மனவேதனை அடைந்து தங்கள் புகாரை பதிவு செய்தனர்".
எனவே தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தங்கள் பகுதிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டு, கிராம பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய மானாமதுரை பிடிஓ மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் திரளாக திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment