சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதிய முறையில் நிரப்பிடுவதை கைவிட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் திரு ச. பாரி மற்றும் மாநிலத் தலைவர் திரு எஸ். ரமேஷ் ஆகியோர் 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதிய முறையில் நிரப்பப்படும் நடைமுறையினை கைவிட கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளனர்.
அக்கடிதத்தில் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களில், மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் ஒன்றான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களில் 8997 பணியிடங்களை ரூபாய் 3000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பிட தமிழக அரசு பார்வையில் காணும் அரசாணையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் கண்டிக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மாண்புமிகு தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் முறையான நியமனங்கள் மூலம் நிரப்பப்படும் என்று அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களை உழைப்பு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் தொகுப்பூதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சுட்டிக்காட்ட விழைவதுடன், இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிராகவும் சமூக நீதிக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மேற்கண்ட அரசாணையை ரத்து செய்யுமாறும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் ஆகிய மூன்று நிலை பணியிடங்களையும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிறப்புக் கால முறை ஊதியத்தின் கீழ் நிரப்பிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு பணியிடங்களை நிரப்ப ஆணை உத்தரவு அளித்திருந்த நிலையில் உடனடியாக தொகுப்பூதிய முறையில் நிரப்பப்படும் நடைமுறையினை கைவிட கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் எதிர்வினை ஆற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment