சத்துணவு உதவியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்திட வழங்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 December 2024

சத்துணவு உதவியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்திட வழங்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.

 


சத்துணவு உதவியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்திட வழங்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு மு. பாஸ்கரன் மற்றும் மாநில பொது செயலாளர் திரு மு. சீனிவாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக செய்தி குறிப்பு பின்வருமாறு, "தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசாணையின்படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களின் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களில் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் மட்டும் ரூ.3,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இத்திட்டம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்துவரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் தங்கள் வாழ்ாவதார கோரிக்கையாக காலமுறை ஊதியத்தை அமுல்படுத்தி இந்த ஆட்சி சத்துணவு ஊழியர்கள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் கொத்தடிமை கூலிமுறையில் தொகுப்பூதியத்தில் சத்துணவு சமையல் உதவியாளர்கள் பணியமர்த்தப்படும் என்ற மேற்கண்ட அரசாணை, ஊழியர்கள் மத்தியல் அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


காமராஜர் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற, அடித்தட்டு குழந்தைகள் பசியார உணவுண்டு கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டுமென மதிய உணவுத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்தினார். அதன்பிறகு 1982ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டின் இத்திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் அமுல்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக சத்துணவுத்திட்டம் உள்ளது.


இத்திட்டம் ஆரம்பிக்கும்போது நாட்டின் கல்வி கற்றவர்களின் விகிதாச்சாரத்தில், மனிதவள மேம்பாட்டில், ஊட்டச்சத்து குழந்தைகள் உள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு பின்னோக்கி இருந்தது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், டாக்டர் கலைஞர் அவர்கள் சத்துணவில் முட்டை சேர்க்கப்பட்ட பிறகு இத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேரியது. தற்போது மனிதவளம், கல்விஅறிவு, ஊட்டச்சத்து என எல்லாவற்றிலும் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்கு பிரதான காரணம் இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் பல்வேறு குறைவாடுகள் இருந்தாலும் சமூக அக்கறையோடு சத்துணவு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்து வருங்கால சமுதாயம் நல்ல வளமாக சமுதாயமாக உருவாக தன்னலம் பாராது உழைத்து வருகிறார்கள். ஆனால், அவ்வாறு உழைக்கும் சத்துணவு ஊழியர்கள் தங்கள் வாழ்வில் கேள்விக்குறியோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் அவர்களை பகுதிநேர ஊழியர்கள் என்று கூறி அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், டாக்டர் கலைஞர் அவர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் அமைப்பாளர்கள் ரூ.7700/-, சமையலர் ரூ.4,100/- சமையல் உதவியாளர் ரூ.3000/- ஊதிய விகிதத்தில் மாற்றம் செய்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். இந்நிலையல் காலை உணவுத்திட்டத்தை இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாம் முழு நேர ஊழியர்களாக கருதப்படுவோம் என என ஆவலோடு எதிர்பாத்து காத்திருந்த நிலையில், அத்திட்டத்தை அவர்களுக்கு வழங்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. சுமார் ஒட்டுமொத்த பணியிடங்களில் பாதியளவு காலிப்பணியிடங்கள் உள்ளநிலையில் கூடுதல் உள்ளநிலையில் கூடுதல் பணிச்சுமையாக ஏற்றுக்கொண்டு ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் மேலும் அவர்களை வஞ்சிக்கும் விதமாக இந்த அரசு மீண்டும் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த முயற்சிப்பது நம்பிக்கை துரோகமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது.


இன்றைய தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 2021 தேர்தல் காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதிய முறையை ஒழித்து காலமுறை ஊதியம் அமுல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறித்தார். அதன்பிறகு 2021 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு மற்றும் 2022 ஜாக்டோ ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் கலந்துகொண்டு இந்த ஆட்சி உங்கள் பேராதரவோடு அமைந்துள்ளது. எனவே, நான் அறித்த வாக்குறுதியை ”மறுக்கவில்லை, மறைக்கவில்லை, மறக்கவில்லை” என மீண்டு நம்பிக்கையளித்தார். ஆனால், இன்று மேற்கண்ட அரசாணையை அறிவித்தது ஊழியர்கள் மத்தியில் இந்த ஆட்சியின் மீது மிகுந்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது".


எனவே, அரசு மேற்கண்ட அரசாணையை திரும்பப் பெற்று சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்தி காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தற்போதைய நிலவரப்படி சத்துணவு அமைப்பாளர்களில் 45 சதவீத காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், சமையலர் பணியிடங்களில் 23 சதவீத காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களில் 56 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad