ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத முகவர்கள் மற்றும் இடைதரகர்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி வரும் அப்பாவி பொதுமக்கள்.
இந்தியாவில் சொத்துக்களை கையாளுதல், மேம்படுத்துதல், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவருக்கு இடையில் தொழில்முறையில் பொதுவானவராக, மத்தியஸ்தர்களாக மற்றும் பிரதிநிதியாக செயல்படும் முகவர் மற்றும் தரகர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் தங்களின் ஆவணங்களை முறையாக பதிவு மற்றும் உரிய அனுமதியுடன் உரிமம் பெற்று தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது அவசியம். மேலும் ஒவ்வொரு ரியல் எஸ்டேட் முகவரும் தனது வணிகத்தை மேற்கொள்ள பதிவுச் சான்றிதழ் மற்றும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் குறைந்தபட்ச தகுதி கட்டாயம் இல்லை என்றாலும், இந்திய குடிமகனாக 18 வயதிற்குமேலும், உரிமை தேர்வில் தேர்ச்சி அல்லது தேவையான முன்னுரிமை கல்வி பெறவேண்டும். இப்பதிவின் முக்கிய நோக்கமே முகவர் அல்லது தரகர்களின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் வழிகாட்டுதல்களில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு முகவர் அல்லது தரகரும் வணிகத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத முகவர் சொத்தை விற்கவோ, ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபடவோ அனுமதி கிடையாது, தவறும் பட்சத்தில் முகவர்களுக்கு அபதாரமும், ஒரு வருட சிறை தண்டனையும் கூட உண்டு. இந்நிலையில் மாநிலம் முழுவதும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உரிய பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறாமல் முகவர்கள் மற்றும் தரகர்கள் பரவலாக ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களின் மிக முக்கிய குற்றச்சாட்டாகும். தொடர்ச்சியாக உரிமமின்றி சொத்துக்களை விற்கவும், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் கமிஷனுக்காக மிகவும் பிற்போக்குத்தனமான செயல்களில் முகவர்களும் இடைத்தரகர்களும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது. ஏறத்தாழ அனைத்து தரப்பு வணிகங்களிலும் ஈடுபடுபவர்கள், குறிப்பாக அரசு வேலைகளில் உள்ளவர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் வெளியில் தெரியாமல் ரியல் எஸ்டேட் வணிக தொழிலில் உரிய அனுமதி உரிமம் பெறாமல் வழக்குகள் மற்றும் குற்ற பின்னணிகள் கொண்ட தரகர்களுடன் சேர்ந்து கொண்டு மோசடி நடவடிக்கைகளிலும், நியாயமற்ற ரியல் எஸ்டேட் வர்த்தகங்களிலும், பணப் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காக்கிகள் முதல் கரைவேட்டி கட்டிய கட்சி பிரமுகர்களும் கூட அடக்கம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இதன் காரணமாக சொத்து விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் வணிக முதலீட்டாளர்கள் இக்கயவர்களின் நடவடிக்கையின் காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதை தினம்தோறும் கண்கூடாக காண முடிகிறது. இத்தகைய மோசடி பேர்வழி முகவர்கள் மற்றும் இடைத்தரர்களில் அட்டகாசத்தால் பத்திர பதிவு சொத்து ஆவணங்களில் வில்லங்கங்களும், பிழைகளும், டபுள் என்ட்ரி பதிவுகளும் ஏற்பட்டு, அவசர தேவைகளுக்கு சொத்தை விற்கவோ வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு முதலீட்டாளர்கள், சொத்தின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளப்பட்டு போலீஸ் கோர்ட் கேஸ் என அலைந்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையை பற்றிய எந்த ஒரு அடிப்படை அறிவும் பெறாதவர்களின் இடையூறுகள் மற்றும் தொடர் தொந்தரவுகள் காரணமாக கடன் தொல்லை மற்றும் வெளியில் சொல்ல முடியாத பெரும் துயரத்திற்கு உள்ளாகும் சிலர் உயிரையும் துச்சமென கருதி இருப்பதைவிட சாவதே மேல் என்று தங்களை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். இக்கயவர்களின் மோசடி வணிகத்தால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து கைகலப்பில் முடிந்த பிறகு காவல்துறையை சென்றடைகின்றன. இதனால் காவல்துறைக்கும் தேவையில்லாத தலைவலி ஏற்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே உடனடியாக தமிழகம் முழுவதிலும் தெருவிற்கு தெரு முளைத்து வரும் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், ரியல் எஸ்டேட் துறையையும் முதலீட்டாளர்களையும் இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற்றத்திற்கு உள்ளாகும் அப்பாவி ஏழை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தலையெடுத்து வரும் இப்புதிய பூதாகரமான பிரச்சனையில் தாமாக முன்வந்து தலையிட்டு தனி கவனம் செலுத்தி மோசடிகளில் ஈடுபட்டு வரும் உரிமம் பெறாத முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுத்து நிறுத்திட கடுமையான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ரியல் எஸ்டேட் துறை சார்ந்த முதலீட்டாளர்கள், சொத்து வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment