மானாமதுரையில் சாலைகள் மற்றும் வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் மாடுகள் மற்றும் தெரு நாய்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 16 October 2024

மானாமதுரையில் சாலைகள் மற்றும் வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் மாடுகள் மற்றும் தெரு நாய்கள்.

 


மானாமதுரையில் சாலைகள் மற்றும் வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் மாடுகள் மற்றும் தெரு நாய்கள்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதிகளில் உள்ள பிரதான சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் மற்றும் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பிரதான தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் கூட்டம் கூட்டமாக மாடுகள் அமர்ந்து கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள், மாணவ மாணவிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் என அனைத்து தரப்பினரும் மிக அபாயகரமான சூழ்நிலையை நாள்தோறும் எதிர்கொண்டு வருகின்றனர். 


இதே சாலையில் தினம்தோறும் மாடுகளையும் தெரு நாய்களையும் அபாயகரமான சூழலில் கடந்து செல்லும் உள்ளூரிலேயே பயணித்து வரும் அரசு அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் என யாரும் இச்சீர்கேட்டுக்கு தீர்வு காண வேண்டி, சமூக அக்கறையோடு முன்வருவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சினையை சரிசெய்திட மானாமதுரை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இப்பிரச்சினையை ஒரு பொருட்டாக கண்டுகொள்வதாக தெரியவில்லை என மானாமதுரை நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த வேதனை தெரிவித்தனர். 


ஏற்கனவே சில வார்டு பகுதிகளில் தெருநாய்கள் கடித்ததில் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நகராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்களது புகாரை கடந்த மாதங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் மாடுகள் மற்றும் தெருநாய்களின் அட்டூழியம் பூதாகரமாக மாறி குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாமல் தடுத்திட எப்போது இப்பிரச்சினைக்கு முழுமையான திர்வு கிடைக்குமா என மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் தாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad