மானாமதுரை அருகே இளைஞரைத் தாக்கிவிட்டு பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேர் கைது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி மகன் அரவிந்தன். இவருக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் மானாமதுரை - தாயமங்கலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முதியோர் இல்லம் அருகில் உள்ள முந்திரிக்காட்டில் புதன்கிழமை தனியாக இருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த பூவலிங்கம் மகன் வில்வகுமார் (25), முனியான்டி மகன் தவமுனியசாமி (26), பீக்குளத்தைச் சேர்ந்த தனிக்கோடி மகன் ராமசாமி (24), முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பூபதிராஜா மகன் அஜய்குமார் (18), அபிராமம் அருகே கீழ்குளத்தைச் சேர்ந்த சண்முகவேலு மகன் முத்துக்குமார் ஆகியோர் அரவிந்தனை சரமாரியாகத் தாக்கி அவரிடமிருந்த பணம், கைப்பேசியைப் பறித்துக் கொண்டதோடு, அந்தப் பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த அரவிந்தன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, மேற்கண்ட 5 பேரையும் வியாழக்கிழமை அன்று கைது செய்தனர். இதற்கிடையில் காவல்துறை விசாரணையின்போது தப்பிச் செல்ல முயன்றபோது முத்துக்குமார் மற்றும் வில்வக்குமார் ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment