மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நகர மன்ற கூட்டம், அடுக்கடுக்கான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்த நகர்மன்ற உறுப்பினர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நகராட்சி ஆணையர் திருமதி ரங்கநாயகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் திரு மாரியப்பன் கென்னடி மற்றும் துணை தலைவர் பாலசுந்தர் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
குறிப்பாக மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் 5-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளதாகவும், கழிவுநீர் செல்வதற்கான வழி இல்லாமல் சில இடங்களில் மண் மூடப்பட்டும், அடைப்பு ஏற்பட்டும் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாக தனது புகாரை பதிவு செய்தார்.
அதேபோல் 14-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சதீஷ்குமார் தனது வார்டில் குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் அமைத்துதர வலியுறுத்தினார். தொடர்ச்சியாக மூன்றாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கங்காதேவி தனது வார்டில் தெரு நாய் தொந்தரவால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருவதாக தனது புகாரை பதிவு செய்தார்.
பின்னர் ஒன்றாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தென்மொழி விஜயகுமார் தனது வார்டு பகுதிகளில் தெரு நாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருவதாகவும், கடந்த சில நாட்களில் நான்கிற்கும் மேற்பட்ட நபர்களை கடித்துள்ளதாகவும், வீட்டில் சொந்தமாக நாய் வளர்ப்போருக்கு லைசென்ஸ் வழங்க ஏற்பாடு செய்யவும், மற்ற தெரு நாய்களை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியும் தனது புகாரை பதிவு செய்து நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.
இறுதியாக அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் தங்களுடைய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் திட்ட பணிகளை பார்வையிட வருமுன்னர் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும், அனைத்து வார்டுகளிலும் இன்னும் முடிவுக்கு வராத தீர்வு எட்டப்படாத ஒரு பிரச்சனையாக பார்க்கப்படும் தெரு ஓரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் மாடுகளை தயவுசெய்து அப்புறப்படுத்த முழுமையான தீர்வுகாண வலியுறுத்தி கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் வார்டு பொதுமக்களின் தேவையை நன்கு அறிந்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்கள் வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகத்தை ஒருமனதாக கேட்டுக்கொண்டனர். மேலும் இக்கூட்டமானது கட்சி பாகுபாடின்றி அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களாலும் பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற நகர் மன்றகூட்டமாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment