மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் மானாமதுரை பயணிகளை பேருந்தில் ஏற்ற மறுத்து பயணிகளுக்கு புதிய வகை யோசனை கூறிய நடத்துனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகளை தொடர்ச்சியாக மதுரை பேருந்து நிலையத்தில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுத்து அரசு பேருந்து நடத்துனர்கள் பயணிகள் புண்படும்படியான வார்த்தைகளை கூறி, மன உளைச்சலுக்கு உள்ளாகும் படி அவமதித்து வரும் செயல் சமீபகாலமாக தொடர்வது வழக்கமாகியுள்ளது. இதற்கிடையில் மே 30ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை மதுரை - ராமேஸ்வரம் செல்லும் பேருந்து பயணம் மேற்கொண்ட பயணிகளிடம் பேருந்து நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைப் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார், அவ்வீடியோ தற்போது பொதுமக்களிடையே வைரலாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, தினந்தோறும் அரசு பேருந்தில் மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுக்கும் நடத்துனர்கள், தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என்றால், அனைத்து பேருந்துகளையும் 1 டூ 1 பேருந்துகளாக இயக்க வேண்டியதுதானே! என்று பயணிகள் கொந்தளித்தனர்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது மானாமதுரை நகராட்சியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் சுழற்சி முறை மாட்டுத்தாவணி முதல் மானாமதுரை பேருந்து நிலையம் வரை (மாநகராட்சி - நகராட்சி) பேருந்துகளை இயக்கினால், சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல அதற்கேற்ற தொடர்பு பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்தால் பயணிகளுக்கும் நிம்மதி அடைவதோடு, கூட்ட நெரிசலையும் வெகுவாக குறைத்துவிடலாம் மற்றும் இக்குறுப்பிட்ட இப்பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்றும் பயணிகள் யோசனை தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இப்பிரச்சனை தொடர்பாக பலமுறை முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் மானாமதுரை நகராட்சி நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி ஆகியோர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் கூட, மேற்கொண்டு மானாமதுரையில் பேருந்து நிக்காது! என்றும், மானாமதுரை என்றால் தனியார் பேருந்தில் செல்ல வேண்டியதுதானே! என்றும் அரசு பேருந்து நடத்துனர்கள் சொல்லி வைத்தார் போல் பொறுப்பற்ற முறையில் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அரிதிலும் அரிதான, புதிய வகையில் ஒரு யோசனை கற்பித்து பயணிகளை குழப்பம் அடையச் செய்வதை நாங்கள் என்னவென்று சொல்வது.
தொடர்ச்சியாக போக்குவரத்து துறையின் அதிகாரிகள் மற்றும் நடத்துனர்களின் இத்தகைய மெத்தனபோக்கை அவர்கள் சரி செய்து கொள்ளாவிட்டால் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்ட பயணிகள் ஆகிய நாங்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க எங்களை தள்ளி விடாதீர்கள் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனை அரசு போக்குவரத்து கழகம் கருத்தில் கொண்டு, போக்குவரத்து துறை நடத்துனர்களிடம் இத்தொடர் சம்பவங்கள் குறித்து உரிய விளக்கங்கள் கேட்பதோடு, உடனடியாக மாவட்ட, நகராட்சி மற்றும் போக்குவரத்து துறை நிர்வாகங்கள் தலையிட்டு கலந்தாலோசித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணும்படி மானாமதுரையை சேர்ந்த அரசு பேருந்து போக்குவரத்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் சார்பாக வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment