சிவகங்கையில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான "கல்லூரி கனவு" நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் “கல்லூரி கனவு" மேல்நிலை வகுப்பு மாணாக்கர்ளுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, மேல்நிலைக் கல்விக்கான அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று, தங்களுக்கு ஆர்வமுள்ள உயர்கல்வியில் சிறந்த முறையில் சேர்ந்து பயன்பெறுவதற்கு அடித்தளமாக, மாணவர்களுக்கு "கல்லூரி கனவு" என்னும் வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்டந்தோறும் தற்போது நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய தினம் பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், மாணவ, மாணவியர்கள் மேற்படிப்பு மற்றும் உயர்படிப்பு பயில்வதில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. எந்தப்பிரிவைச் சார்ந்த படிப்பை நாம் படித்தால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும் என்பதையும், வாழ்க்கைக்கு அடித்தளமானது படிப்புதான் என்பதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இதற்கு அடிப்படையாக "கல்லூரி கனவு" நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது.
இதன் வாயிலாக, மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்த மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி பாடப்பிரிவில் சேர்ந்து பயிலுவதற்கும், வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப் பாடப்பிரிவுகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உட்பிரிவுகள் பற்றியும், அவற்றிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் திறமைமிக்க வல்லுநர்கள் வாயிலாக விளக்கம் அளிக்கப்படவுள்ளன. கல்லூரி கல்விக்கடன் தொடர்பாக வங்கிகளை அணுகி, கல்விக்கடன் பெறும் முறைகள் குறித்தும். உயர்கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும், மாணவர்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்து கொள்ளும் பொருட்டு, உரிய விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, சிறந்த கல்லூரிகள் குறித்தும், மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து விபரங்களும் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் "கல்லூரி கனவு" 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும், இந்நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துரைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களையும் உள்வாங்கி, இது குறித்து தங்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடி, தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தங்களது வாழ்க்கைத்தர முன்னேற்றத்திற்கு இதனை அடிப்படையாக நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ. மோகனச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுரேஷ் குமார், உத்வேக பேச்சாளர் மகாலட்சுமி (மானாமதுரை), உயர்கல்வி வழிகாட்டு வல்லுநர் இனியன் (சென்னை), பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment