அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத் தொடக்கவிழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 February 2024

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத் தொடக்கவிழா.


அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத் தொடக்கவிழா கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின்  வழிகாட்டுதலில் நடைபெற்ற இவ்விழாவிற்குத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் துரை வரவேற்புரை வழங்கினார்.  அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் பொறுப்பு முதல்வரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் முருகேசன் தலைமை வகித்து இன்றைய இளைய சமூகத்திற்கு கலைஞரின் இலக்கியப் பணிகளை அறிமுகம் செய்து வைக்கும் நோக்கத்தோடு இந்த கலைஞர் மாணவர் தமிழ் மன்றம் துவக்கப்பட்டு இருப்பதாக கூறினார். 

விழாவின் சிறப்பு விருந்தினராகிய புதுக்கோட்டை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் *கலைஞரும் தமிழும்* என்னும் பொருண்மையில் சிறப்புரை நிகழ்த்தினார். கவிதைப்பித்தன் தனது சிறப்புரையில் கலைஞரின் கவிதைச் சிறப்பு குறித்தும் கலைஞருக்கும் தனக்குமான    தமிழ் சார்ந்த உரையாடல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் குறித்தும் ,கலைஞர் தன் வாழ்வில் பெரும் பகுதியில் தமிழுக்காகவும் தமிழ் சமூகத்திற்காகவும் ஓயாது உழைத்தவர் என்றும் அவர் 12 வயதிலிருந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது 16-வது வயதில் மாணவர் மன்றத்தை துவக்கி தமிழ் மொழிக்கு பெருமை ஆற்றியவர் என்றும் கலைஞரின் அளப்பரிய பணிகளை இந்த மாணவர் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சிறப்புற எடுத்துரைத்தார். 


முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்  தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சிதம்பரம் நன்றியுரை  நல்கினார்.   முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மாணவர் மன்றத் தொடக்கவிழாவினை முன்னிட்டுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் முதற்பரிசினை வணிகவியல் முதலாமாண்டு மாணவி சார்மதியும் , இரண்டாம் பரிசினைப் புவியமைப்பியல் முதலாமாண்டு  மாணவி அபிநயாவும், மூன்றாம் பரிசினை இளநிலை வணிகவியல் இரண்டாமாண்டு மாணவி ஸ்ரீநிதியும் பெற்றனர். கவிதைப்போட்டியில் முதற்பரிசினை இளநிலை கணிதவியல் மூன்றாமாண்டு மாணவி பிரியங்காவும் இரண்டாம் பரிசினை இளநிலை கணிதவியல் இரண்டாமாண்டு மாணவி சுதந்திரப் பிரியாவும் மூன்றாம் பரிசினை முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி தவமணியும் பெற்றனர். 


கட்டுரைப்போட்டியில் முதற்பரிசினை இளங்கலை ஆங்கிலம் இரண்டாமாண்டு மாணவி  நந்தினியும் இரண்டாம் பரிசினை முதுகலைத்தமிழ் முதலாமாண்டு மாணவி பவித்ராவும் மூன்றாம் பரிசினை இளங்கலை ஆங்கிலம் இரண்டாமாண்டு மாணவி பொம்மியும் பெற்றனர். பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுள் ஒருவருக்கு ஐந்தாயிரம் வீதம் மூவருக்கும் பதினைந்து ஆயிரமும் இரண்டாம் பரிசு பெற்றவர்களுள் ஒருவருக்கு மூவாயிரம் வீதம் மூவருக்கு ஒன்பதினாயிரமும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுள் ஒருவருக்கு இரண்டாயிரம் வீதம் ஆறாயிரமும் வழங்கப்பட்டன.


- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.

No comments:

Post a Comment

Post Top Ad