இளையான்குடியில் தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முதலாமாண்டு விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2024

இளையான்குடியில் தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முதலாமாண்டு விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்  முதலாமாண்டு விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி சார்பாக இளையான்குடி வட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. போட்டியினை இளையான்குடி பேரூராட்சியின் 1 மற்றும் 2 வார்டு உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த அல். இபுராஹிம்ஷா மற்றும் கண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாதன் ஆகியோர் தலைமையேற்று தொடங்கி வைத்தனர். 

தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியின் சேர்மன் சரவணன், செயலாளர் மாணிக்கம், பரமக்குடி சக்தி சிலம்பம் மற்றும் யோகா அகாடமியின் நிறுவனர் தில்லைக்குமரன், மூத்த வழிகாட்டி மருத்துவர் பாண்டியன் மற்றும் இராமநாதபுர மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இச்சிலம்பாட்ட போட்டிக்கு சிவகங்கை, காளையார்கோயில், இளையான்குடி, பரமக்குடி, இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து 250 மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியானது தனித்திறன் -ஒற்றைக்கம்பு, கம்புச்சண்டை, தனித்திறன் - இரட்டைக்கம்பு ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய கலையும், எல்லா கலைகளுக்கும் மூத்த கலையுமான சிலம்பத்தை ஆர்ப்பரிக்க சுற்றி அசத்தினர். இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள். இப்போட்டிக்கு வருகை புரிந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்  பார்வையாளர்களான பொது மக்களுக்கு சிறப்பான நண்பகல் உணவு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியின் நிறுவனர் கவிஞர் சோதுகுடி சண்முகன் இப்பாரம்பரிய விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டியை பற்றிக் கூறுகையில், தமிழும், தமிழ் சார்ந்த கலைகளும் உலகிற்கே முன்னோடி. அதனை காத்திடவும், வளர்த்திடவும் வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2022 ல் ஆரம்பிக்கப்பட்ட தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியில் ஆசான் கோகுல் சபரி சிவம் அவர்களின் ஆளுமையான பயிற்சியில் மாணவர்கள் சிலம்பம், வாள், சுருள்வாள், மான் கொம்பு மற்றும் அலங்கார சிலம்பம் என பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். 


இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெறும் போட்டிகளில் மாநிலம் மற்றும் மாவட்டம் என பல நிலைகளில் பரிசு பெற்று வருகின்றனர். மேலும் பலதரப்பட்ட போட்டிகளில் மாநில மற்றும் மாவட்டம் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி வருகின்றனர். வீரம் நிறைந்த சிவகங்கை பூமிக்கு இன்னொரு வித்தாக இளையான்குடியில் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி இருப்பது பெருமைக்குரிய விசயம் என்று அப்பகுதியின் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில் மாலை நேரத்தில் அலைபேசியோடு அலையும் மாணவர்களை உடல்திறன், மனத்திறன் சார்ந்து சிலம்பம் போதிக்கும் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியின் சிறப்பு என நிறுவனர் உணர்வோடு கூறினார்.


மேலும் இப்போட்டிக்கு இராமநாதபுரம் மாவட்ட சிலம்ப ஆசான்கள், ஏனைய பல்வேறு ஆசான்கள் மற்றும் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் நடுவர்களாகவும் வழிகாட்டிகளாகவும், போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களாகவும் பணியாற்றினர். போட்டி நிறைவுபெற்ற போது தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியின் தலைமை ஆசான் கோகுல் சபரி சிவம் அனைவருக்கும் தனது சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad