மானாமதுரை நகராட்சியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அதிரடியான கள ஆய்வுகள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2024

மானாமதுரை நகராட்சியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அதிரடியான கள ஆய்வுகள்.


தமிழக அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் நேற்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஒரு ஊரில் தங்கி துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இ.ஆ.ப மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் ஆகியோர் மானாமதுரை பகுதிகளில் நேற்று இத்திட்டத்தை தொடங்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளும் ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர். 


இன்று வியாழக்கிழமை மானாமதுரையில் காலை சுமார் 6.30 மணியளவில் அரசு ஆவின் பாலகத்தில் பசும் பாலின் தரம், விலை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு, பாலின் தரத்தினையும் பரிசோதனை மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக சுமார் 7 மணியளவில் மானாமதுரை நகராட்சி அருகில் உள்ள காலை சிற்றுண்டி மைய சமையல் கூடத்தில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 8, 9 போன்ற பல பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை வாங்கும் முறை, தண்ணீரின் தரம் மற்றும் பொதுமக்களிடம் கூடுதலாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். 

பின்னர் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட அரசகுழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டதோடு, தாயமங்கலம் சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் புதிய கட்டிட பணிகளை ஆய்ந்து, அதன்  செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். அடுத்தகட்டமாக பர்மாகாலனில் உள்ள அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆய்வு செய்து குழந்தைகளுடன் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உணவு அருந்தினர். பின்பு "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மானாமதுரை அனுசியா மஹாலில் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை மனுக்கள் வாயிலாக பெற்று, அம்மனுக்களின் மீதான சில கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அர்விந்த் இ.கா.ப, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, துணை பெருந்தலைவர் முத்துச்சாமி, நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி, நகராட்சி பொறியாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள், நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad