வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள் சாகுபடி பற்றிய விவசாயிகள் பயிற்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 September 2023

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள் சாகுபடி பற்றிய விவசாயிகள் பயிற்சி.


சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள் சாகுபடி பற்றிய விவசாயிகள் பயிற்சி பிரம்புவயல் கிராமத்தில் நடைபெற்றது. பிரம்புவயல் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டார்கள். 

சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி. நா.சண்முக ஜெயந்தி அவர்கள் இப்பயிற்சிக்கு தலைமை ஏற்று கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். தற்பொழுது நிலவி வரும் பருவநிலை மாறுபாடு ,கூலி ஆட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகமான சாகுபடி செலவு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்கள் தரிசாக மாறிக்கொண்டு வருகின்றன. நம் பகுதிகளில் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வரும் நெற்பயிருக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படுகிறது. 


பருவநிலை மாறுபாடு காரணமாக நெற்பயிருக்கு தண்ணீர் தேவையான அளவு கிடைப்பதில்லை இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இக்காரணங்களை விவசாயிகள் சிந்திக்க வேண்டும் .அதாவது விவசாயிகள் தங்களுடைய அனைத்து நிலங்களிலும் நெற்பயிரே சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரான கேழ்வரகு, குதிரைவாலி, வரகு மற்றும் திணை போன்ற சிறு தானிய பயிர்களை நான்கில் ஒரு பகுதியிலாவது பயிரிட வேண்டும். சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும். 


மேலும் வளம் குறைந்த மண்ணிலும் மானாவாரியாக சாகுபடி செய்யலாம் .சிறு தானிய பயிர்களை பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவது மிகக் குறைவு எனவே சாகுபடி செலவும் குறைவு. அதனால் விவசாயிகள் சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கு முன் வர வேண்டும் என்று கூறினார்கள். முனைவர் .செந்தூர் குமரன் பேராசிரியர் மற்றும் தலைவர் வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி அவர்கள் சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தற்பொழுது நம் சந்ததியினர்கள் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றார்கள் அரிசி உணவையே பெருமளவில் உண்பதால் சர்க்கரை நோய் நாம் எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகளில் முக்கியமானதாகும். 


ஆகவே சிறு தானியங்களை சாகுபடி செய்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். முனைவர் .செல்வராஜ் பேராசிரியர் வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி அவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு தொழில் நுட்ப உரையாற்றினார்கள். கேழ்வரகு ,குதிரைவாலி வரகு மற்றும் திணை போன்ற சிறுதானிய பயிர்களின் ரகங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் போன்ற விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார் மேலும் நாம் தொடர்ந்து உட்கொண்டு வரும் அரிசி உணவை விட சிறுதானியங்களில் மிக அதிக அளவு புரதம் உள்ளதாக கூறினார். திரு காஜா முகைதீன் உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையில் இருந்து கலந்துகொண்டு சிறுதானிய விலைப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேளாண் இயந்திரங்களின் பங்கு எவ்வாறு உள்ளது என விரிவாக எடுத்துரைத்தார்.


மேலும் வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய அரசின் மானிய திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் அதிகமாக இருக்கிறது என்று கூறி வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளை ஊக்குவித்தார். சாக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு. கார்த்தி குமரன் மற்றும் திரு.சோலை ராஜன் ஆகியோர் பயிற்சியில் கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்து பிறகு பிரம்புவயல் கிராம விவசாயிகள் நடப்பாண்டில் பயனடைய வலியுறுத்தினார். இப்பயிற்சியில் அட்மா திட்ட  தொழில்நுட்ப மேலாளர்கள் திருமதி .இரா. தமிழ்ச்செல்வி எஸ்தர், செல்வி .சு .லட்சுமி பாரதி ஆகியோர் கலந்து கொண்டு இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுக்கு மண்மாதிரியின் அறிக்கைகள் வழங்கப்பட்டு அதன்படி உரமிட அறிவுறுத்தப்பட்டது.


செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad