முன்னதாக முன்னாள் மாணவ மாணவியர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேராசிரியர்கள் அழகப்ப செட்டியார் நினைவு மண்டபத்திற்கு அணிவகுத்துச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் தொடர்ச்சியாகக் கல்லூரி முதல்வர், பெத்தாலெட்சுமி முன்னிலையில், துறைத் தலைவர் ஜெயசாலா சிறப்புரையாற்றினார். அவர் கல்லூரி மற்றும் ஆங்கிலத் துறையின் வரலாறு மற்றும் சிறப்புகளை எடுத்துக்கூறி, துறையின் முன்னாள் மாணவ மாணவியர்களின் முதல் சந்திப்பை ஏற்பாடு செய்ததற்குப் பெருமைப்படுவதாகவும், கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு முன்னாள் மாணவ மாணவியர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை முன்னாள் மாணவ மாணவியர்கள், சகாய மேரி மற்றும் சாம் டேவிட் தொகுத்து வழங்கிட, முன்னாள் மாணவி பெனிட்டா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் மாணிக்கம், புஷ்பலதா மற்றும் மணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவ மாணவியர்கள் சார்பாக, சிறப்பு விருந்தினர்கள், துறைத்தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது. முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பின் நினைவாக, செடி நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.
பிறகு, முன்னாள் மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரி கால பசுமையான நினைவுகளை மேடையில் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு தாங்கள் துணை நிற்பதாகக் கூறினர். 1998-99-ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து கல்லூரியில் ஒன்றாக சந்திப்பதால், அவ்வாண்டைச் சேர்ந்த தமிமுல் அன்சாரி மற்றும் வகுப்பு நண்பர்கள் இந்நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்திட, பிற கல்வியாண்டு மாணவர்களும் சேர்ந்து செயல்பட்டனர்.
இறுதியாக முன்னாள் மாணவி திருமதி ஞானாம்பாள் நன்றியுரை நிகழ்த்தினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment