சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த திரு கிருஷ்ணத்தேவர் என்பவர் மதுரை - ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் மானாமதுரை மேல்கரையில் அமைந்துள்ள அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனி பிரிவில் மனு தாக்கல் அளித்திருந்தார். அம்மனுவை போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மறுபரிசீலனை செய்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலம் சார்பாக மனுதாரருக்கு நகல் மூலமாக அளித்த பதிலின் சுருக்கம் பின்வருமாறு, "மானாமதுரை மேல்கரையில் அமைந்துள்ள அண்ணாசாலை பேருந்து நிறுத்தத்தில் 1 - 1, 1 - 3, 1 - 5 மற்றும் ஏசி பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல அவ்வழித்தடத்தில் செல்லும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரியபடுத்திக் கொள்வதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்பதாகும்.
மேலும் இது தொடர்பாக போக்குவரத்து கழக துணை மேலாளர் கூறுகையில், மானாமதுரை அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்கு ஏதுவாக மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மானாமதுரை மேம்பாலத்திற்கு கீழ் சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி அதன் பின்னர் மானாமதுரை பேருந்து நிலையத்தை இனிவரும் காலங்களில் சென்றடையும் என்றும், சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலோ, பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றாலோ அந்த குறிப்பிட்ட பேருந்தின் எண்ணை போக்குவரத்து கழகத்திற்கு தெரியப்படுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment