கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (24.07.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவிக்கையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களும் அதன் பயன்களும் கிடைக்கப்பெற செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அறிவுப்போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில் மாணவர்கள் நவீன காலத்திற்கு ஏற்ப தங்களது அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சாமானிய மக்களும் கல்வியை பெரும்வகையில், பள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரி வரையிலும் இலவசமாக கல்வியை மாணாக்கர்கள் பெறுவதற்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தலைசிறந்து விளங்கிடும் வகையிலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், வழிவகை செய்தார்கள். அவ்வழியில், தமிழ்நாடு முதலமைச்சர், காலை உணவு திட்டம் மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களை புதிதாகவும் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள்.
மாணாக்கர்களுக்கு அறிவுக் கூர்மை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆரோக்கியமான உடல் நலத்தையும் அளிப்பதற்காக சத்தான உணவுகளை வழங்குவதற்கும் வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள். பெற்றோர்களின் சிரமத்தை பொருளாதார ரீதியாக குறைத்துவிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களின் நிலையிலிருந்து அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள். மேலும், பள்ளிகளின் மேம்பாட்டு வசதிக்காக முன்னாள் மாணவர் சங்க மாணவர்கள் ஒன்றிணைந்து, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசுடன் இணைந்து செயல்படுத்துவதற்கும் முன் வரலாம்.
கல்லை வடித்து சிற்பியாக நல் வடிவம் கொடுப்பதைப்போல், ஆசிரியர்களும் ஒவ்வொரு மாணாக்கர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கல்வியை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டியாகவும், அடிப்படையாகவும் திகழ்ந்திட வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையிலும், மாணாக்கர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் வழி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்திடும் வகையில், மாணாக்கர்கள் நல்ல முறையில் கல்வி கற்று தங்களது வாழ்க்கை தரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் ஒன்றான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியருக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 4,270 மாணவர்கள் மற்றும் 6,323 மாணவியர்கள் என, ஆக மொத்தம் 10,593 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
இதில், மாணவியர்களுக்கு தலா ரூ.4,760மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4,900 மதிப்பீட்டிலும் என, மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. அதன் தொடக்கமாக, இன்றைய தினம் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 210 மாணவியர்களுக்கு தலா ரூ.4,760வீதம் ரூ.9,99,600 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிக்ள வழங்கபடவுள்ளன.
சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அடிப்படையாக மிதிவண்டிகள் விளங்கி வருகிறது. இன்றையதினம் இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா மிதிவண்டிகளை பெற்றுள்ள மாணாக்கர்கள் அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றி, முறையாக மிதிவண்டிகளை செலுத்த வேண்டும். இதுபோன்று, மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணாக்கர்கள், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.அம்பிகாபதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.என்.மணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ்குமார், விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியை உ.சிவமணி, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment