சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்களை கண்டித்தும், பதவி நீக்கம் செய்ய இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்தியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக "கையெழுத்து இயக்கம்" நேற்று மாலை சிவகங்கை மாவட்ட செயலாளர் பசும்பொன் சி. மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் மானாமதுரை மதிமுக நகர செயலாளர் கண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேசிய மாவட்ட செயலாளர் சி. மனோகரன் அவர்கள், "தமிழக ஆளுநர் திரு ரவி அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கூறியதோடு தமிழ்நாடு என்று உச்சரிக்க மறுக்கிறார். சமூக நீதிக்காகவும் சுயமரியாதைக் காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்கள் சட்டமன்ற உரையில் வாசிக்க மறுக்கிறார். இந்திய அரசியல் சட்டப்படி இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆனால் மாத சார்பின்மைக்கு எதிராக பேசுவதோடு இந்தியா மதச்சார்புள்ள நாடு என்றும் கூறுகிறார்" என்று கடுமையாக விமர்சித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மானாமதுரை மதிமுக ஒன்றிய செயலாளர் அசோக் மற்றும் நகர் கழக செயலாளர் கண்ணன் அவர்கள் பேசுகையில் "தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலைவாய்ப்பையும் பறிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி ஒன்பது லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறார். மேலும் உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் பேசுவதோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஜி.யு. போப்பையும் விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் பாதிக்கப்பட்டு 45 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தது இந்த மசோதாவை நிறைவேற்றிட விடாமல் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என். ரவி" என்று குற்றம் சாட்டினார்கள்.
பின்னர் அரசியல் மேடைப் பேச்சாளர் தீனதயாளன் அவர்கள் பேசுகையில் "திரு ஆர் எம் ரவி அவர்கள் தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஒன்றிய அரசின் ஏஜென்ட் போல நடந்து கொள்வதோடு தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஆளுநர் ரவி என்றும் கடுமையாக சாடினார்".
இந்நிகழ்வில் மானாமதுரை மதிமுக நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் வ. தனுஷ்கோடி, மண்டல இணையதள பொறுப்பாளர் பி. மருதுபாண்டியன் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும் மரியாதை நிமித்தமாக திமுக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர் மற்றும் ஏனைய தோழமைக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment