இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியினர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டும், சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்திட அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்றையதினம் சிவகங்கையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் இரண்டாவது நிகழ்ச்சியாக மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைகளாகிய கல்லூரி மாணாக்கர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டையகால தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப்புரட்சி மற்றும் அதன் திட்டங்கள், அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு, திறமை மிக்க சொற்பொழிவாளர்களைக் கொண்ட மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்றையதினம் இங்கு நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

இதில், பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழிவாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணாக்கர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் க.துரையரசன் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment