தமிழ்நாடு முதலமைச்சர், உயர்கல்வி பயின்று வரும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் 2-ஆம் கட்ட திட்டத்தினை, தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, “புதுமைப்பெண் திட்டத்தின்” கீழ் கல்லூரி மாணவியர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவியர்களுக்கு வழங்கி, தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப்பெண் 2-ஆம் கட்ட திட்டத்தினை” இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.

அந்நிகழ்ச்சியின் வாயிலாக கல்லூரி மாணவியர்களுக்கு முத்தான கருத்துக்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார்கள். கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருதப்படும் என்ற அடிப்படையில், அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் புதிதாகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து, கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அத்திட்டங்கள் மட்டுமின்றி, புதிதாகவும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்திடும் பொருட்டும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை கடந்த 05.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அன்றையதினமே சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவியர்களுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூபாய் 1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி பற்று அட்டைகள் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் இத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் நோக்கில், 2-வது கட்டமாக தொடங்கி வைத்து, கல்லூரி மாணவியர்களை பயன்பெறச் செய்துள்ளார்கள். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள 37 கல்லூரிகளின் சார்பில் மொத்தம் 1,316 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதனடிப்படையில் 606 கல்லூரி மாணவியர்களுக்கு தலா ரூபாய் 1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையினை தங்களது கல்விக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து மாணாக்கர்களின் பெற்றோர்களாக இருந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். இதனை, மாணாக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு, நல்லமுறையில் பயின்று, தங்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் ப.அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), இராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment