சிவகங்கை மாவட்டத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய அளவிலான குடற்புழு நீக்க நாள் முகாம் இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாமின் மூலம் ஒன்று முதல் பத்தொன்பது (1-19) வயதிற்குட்பட்ட அனைவருக்கும், இருபது முதல் முப்பது வயதிற்குட்பட்ட (20-30) பெண்கள் அனைவருக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர) அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
இதில், மாவட்டத்திலுள்ள 1,115 பள்ளிகளை சார்ந்த 2,56,714 மாணாக்கர்களுக்கும் 1,512 அங்கன்வாடி மையங்களை சார்ந்த 55,272 குழந்தைகளுக்கும், 54 கல்லூரிகளை சார்ந்த 53,339 மாணாக்கர்களுக்கும் என மொத்தம் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 3,65,325 மாணாக்கர்களுக்கும்; மற்றும் 20-30 வயது உள்ள 67,637 பெண்களுக்கும் மொத்தம் 4,32,962 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாயிலாக, இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் வீடுகள் தோறும் சென்று இம்மாத்திரை வழங்கப்படவுள்ளது. விடுபட்டவர்களுக்கான 21.02.2023 அன்றும் நடைபெற உள்ளது.
இம்முகாமில், 281 கிராம சுகாதார செவிலியர்கள், 17 ஆஷா பணியாளர்கள், 1,552 அங்கன்வாடி பணியாளர்கள், 1,169 பள்ளி மற்றும் கல்லூரி நோடல் ஆசிரியர்கள் மூலமாக அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. குடற்புழுவின் தாக்கம் குறித்தும், அத்தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கென கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இன்றையதினம் இந்நிகழ்ச்சியின் மூலம் எடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியின் வாயிலாக அறிவீர்கள். குடற்புழு என்பது அனைவரும் உடலினுள் இருக்கக்கூடிய ஒன்றாகும். இவை இரத்தத்தில் அயர்ன் அளவில் குறைத்து, அமீபாவிற்கு வழி வகுக்கக்கூடியதாகும்.

மேலும், இதனால் உடற்சோர்வு, பசியின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒன்று முதல் பத்தொன்பது (1-19) வயதிற்குட்பட்ட அனைவருக்கும், இருபது முதல் முப்பது வயதிற்குட்பட்ட (20-30) பெண்கள் அனைவருக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர) அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கிட தமிழக அரசும், ஒன்றிய அரசும் திட்டமிட்டு, ஒவ்வொரு வருடமும், வருடத்திற்கு இரண்டு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் என 6 மாதத்திற்கு ஒருமுறை அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றம் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீடுகள் தோறும் சென்று இம்மாத்திரை வழங்கி அனைவரின் நலன் காத்திட வழிவகை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சுகாதாரத்தை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். தங்களது பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தங்களது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு முறையாக கை கழுவும் பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே, நம் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானதாகும். நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான், நன்கு படித்து நல்ல நிலையை அடையமுடியும். எனவே, சுகாதாரத்தை பேணிக்காத்திட அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (பிறப்பு இறப்பு அலுவலர்) சின்னத்துரை, சிவகங்கை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.கலாவதி, வட்டார மருத்துவர் அலுவலர் (கீழப்பூங்குடி) மரு.பார்த்தசாரதி, சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர் (22-வது வார்டு) சி.எல்.சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment