சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 191, 192 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 181ல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அளித்த வாக்குறுதிகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு நிறைவேற்றிட அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் பெயர் கருப்பசாமி அவர்களின் தலைமையிலும், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி குமரேசன், மாநில பொருளாளர் வைகை பிரபா, மாநிலத் துணைத் தலைவர் பா. யுவராஜ் மற்றும் வி. சுதாகர் ஆகியோரின் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் சுமார் 12,000 மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 12500 ஊதியத்தில் அரசின் வழிமுறைகளோடு நியமிக்கப்பட்டு, கடந்த 13 ஆண்டுகளாக பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றிடாமல் உள்ளதால் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் வின்சென்ட் பவுல், பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், அன்னகாமு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கண்டனம் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது இப்போராட்டத்தில் மானாமதுரை மூங்கில் ஊரணி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மனோகரன் மயக்கமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment