புதிய குற்றவியல் சட்டதிருத்தம் பிற்போக்குதனமானது! சில மாற்றங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கின்றது - ப. சிதம்பரம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்கள் தனது 'X' தளத்தில் தெரிவித்துள்ளது பின்வருமாறு, "மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஆனால் பழைய சட்டங்களில் சில திருத்தங்களை செய்வதற்கு பதில், அதிலிருந்து கட், காபி, பேஸ்ட் செய்யப்பட்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. புதிய சட்டங்களில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால், பழைய சட்டங்களிலேயே இதனை திருத்தம் செய்திருக்கலாம். சிறப்பம்சங்களை வரவேற்றும் அதேவேலையில், இதில் உள்ள சில பிறபோக்கு அம்சங்களும் விமர்சிக்கப்பட வேண்டியவையாக இருக்கிறது. புதிய சட்டத்தில் உள்ள சில மாற்றங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கின்றன. இந்த சட்டத்திற்கான மசோதா நாடாளுமன்ற நிலை குழுவுக்கு வந்தபோது ஏராளமான திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை எம்பிக்கள் முன்வைத்திருந்தனர்.
இது குறித்து எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. அதேபோல எம்பிக்களின் கருத்துகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை. சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், நீதிபதிகள் என பலரும் கூட இந்த சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் இல்லை.
எனவே இதனை ரத்து செய்துவிட்டு விவாதங்கள் மூலமாக போதுமான திருத்தங்களை செய்யப்பட்ட சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க, எதிர்காலத்திற்கு பொருந்தும் வகையில், மூன்று சட்டங்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment