அதன்படி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிற்கு தடை விதித்து, கடந்த 01.01.2019 முதல் அந்நடைமுறை அமலில் உள்ளது, வருங்கால சந்ததியினர்களின் நலனுக்காகவும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினைத் தடுக்கப்பதற்கும், பாரம்பரிய துணிப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவும், அரசால் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மஞ்சப்பை என்பது பண்டைய காலங்களிலிருந்து தொன்றுதொட்டு வரும் வழக்கமாக நமது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, மஞ்சள் என்பது மங்களகரமான ஒன்றாகும். மக்களுடைய கவனத்தை ஈர்க்கின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23.12.2021 அன்று “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டிற்கும் நமக்கும் தீங்கு விளைவிக்கின்ற நெகிழி பயன்பாட்டினை முற்றிலும் ஒழிப்பதற்கும், இயற்கையை பேணிக்காத்து எதிர்கால சந்ததியினர்களுக்கு வளமான, சுகாதாரமான சமூகத்தை ஏற்படுத்திதர ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
அதற்கு அடிப்படையாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சாரத்தினை பொதுமக்களிடையே பயனுள்ளதாக உருவெடுக்கும் நோக்கில்இ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்துவது ஊக்குவிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி பகுதிகளிலுள்ள பொது இடங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் வளாகம் மற்றும் திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையம், சிங்கம்புணரி பேரூராட்சி பகுதி ஆகிய இடங்களில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி கூடுதலாக மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் நிறுவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயங்களாகவோ அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது ஐந்து 2 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது பத்து 1 ரூபாய் நாணயங்களாகவோ செலுத்தி, பொது மக்கள் மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். இந்த இயந்திரம் 24 மணி நேரமும் செயல்படும். மேலும், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களின் மூலம் இந்த தானியங்கி இயந்திரத்தினை சரிவர கண்காணிப்பதற்கும், தங்குதடையின்றி பொதுமக்களுக்கு மஞ்சப்பை இந்த தானியங்கி இயந்திரம் மூலம் கிடைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, அரசின் அறிவுரையின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, பாரம்பரியத்தை கடைபிடித்திடும் வகையில், துணிப்பைகளின் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நமது ஒவ்வொருவரின் பங்கும் இருந்திட வேண்டும் என, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ச.பாண்டியராசன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் க.இராஜராஜேஸ்வரி, பேரூராட்சி துணைத்தலைவர் கான் முகமது, 12-வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் இராஜேஸ்வரி சேகர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment