தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் சிறு கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், பொது மன்னிப்பில் விடுதலையான சிறைவாசிகளின் மறுவாழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு, அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறைவாசிகளுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.3,25,000 மதிப்பீட்டிலான காசோலைகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. இவ்உதவித்தொகையினை பெரும் பயனாளிகள், இதன் மூலம் சிறுதொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவிச் சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சி.சேதுராமன் மற்றும் நன்னடத்தை அலுவலர்கள் இரா.கி.பிரியதர்ஷினி, அ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment