சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடந்துவரும் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க திருவாரூரில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் பசும்பொன் நோக்கி தங்கள் ஆதரவாளர்களுடன் பத்துக்கும் அதிகமான காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வந்த வாகனங்கள் மானாமதுரை - சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள வைகை ஆற்றுப்பாலத்தில் முன்னும், பின்னுமாகச் சென்றன. இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாகச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார்கள் முன்னும், பின்னுமாக தங்களுக்குள் மோதிக்கொண்டன.இதில் பத்துக்கும் அதிகமான கார்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும் அவர்களோடு காரில் வந்த அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன், கல்யாண சுந்தரம், ஜோதிபாசு, மதியழகன், தமிழ்செல்வன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் காரணமாக அந்தச் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment