சமத்துவபுரம் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 December 2022

சமத்துவபுரம் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஆய்வு.


சிவகங்கை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுகூடல்பட்டி கிராமத்திலுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் வசித்து வரும் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,   திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரப்பேட்டை ஊராட்சி, சிறுகூடல்பட்டி கிராமத்தில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டார். 


இந்நிகழ்ச்சிகளில்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை. டாக்டர்.அதுல்யா மிஸ்ரா, நில நிருவாக ஆணையர் எஸ்.நாகராஜன், செயல் உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டாக்டர்.கே.பி.கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர்  பா.பிரியங்கா பங்கஜம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  ஆ.தமிழரசிரவிக்குமார், ஆகியோர் முன்னிலையில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிகளில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  பேசுகையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், ஆட்சி காலத்தில் ஏழை, எளியோர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் அத்திட்டங்களை பின்பற்றுகின்ற வகையில், சிறப்பாக நிர்வாகத்தை தமிழகத்தில் மேற்கொண்டார்கள். அதில், குறிப்பாக தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 


குறிப்பாக, அனைத்துத் தரப்பினரும் ஏற்றத்தாழ்வின்றி சமமான முறையில் வசித்திடும் பொருட்டும், முன்மாதிரியான கிராமத்தினை உருவாக்கிட வழிவகை ஏற்படுத்திடும் பொருட்டும்,  வீடு இல்லாதவர்களுக்கும் கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், சாதிமத பேதமின்றி, அமைதிப் பூங்காவாக உருவெடுக்கும் நோக்கிலும், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக, தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம் திகழ்ந்தது. 


தந்தை பெரியார், நினைவு தினமான இன்று, வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் சமத்துவபுரம் பகுதியில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்தினை ஏற்படுத்தினார்கள். அவ்வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்திற்கு தற்போது புத்துயிர் ஊட்டியுள்ளார்கள். 


கடந்த காலங்களில் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாத வீடுகளை, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள். அதன்படி, இன்றையதினம் அப்பயனாளிகள் 100 நபர்களுக்கு தலா ரூ.1.52 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப்பட்டாக்களை நான் வழங்கியுள்ளேன். 


சிவகங்கை மாவட்டத்தலுள்ள மொத்தம் 7 சமத்துவபுரங்களை ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை கடந்த 08.06.2022 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர், நேரில் வருகை புரிந்து திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்கள். 


இன்றைய தினம் குமாரப்பேட்டை ஊராட்சி, தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, இப்பகுதியில் வசித்து வரும் ஒரு குழந்தை இப்பகுதிக்கு பூங்கா வேண்டுமென என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இப்பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். இதுமட்டுமன்றி, இப்பகுதிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே மேம்படுத்தப்படும்.


மேலும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளை நேரில் சந்தித்து, திட்டத்தின் பயன்கள் குறித்து, நேரில் கேட்டறிந்தேன். இதுபோன்று பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், மக்களைத் தேடி அரசு என்ற உன்னதநிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. திட்டங்களின் பயன்களைப் பெறும் பயனாளிகள் அதனை உரியமுறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 


அதனைத்தொடர்ந்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர்களுக்கான கட்டப்பட்டுவரும் 90 வீடுகள் தொடர்பான கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  நேரில் ஆய்வு மேற்கொண்டு, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை ஒப்படைப்பு செய்வதற்கென பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.சிவராமன்,  தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad