பெண்களுக்கு எதிரான, வன்முறை ஒழிப்பு தினக் கருத்தரங்கு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 25 November 2022

பெண்களுக்கு எதிரான, வன்முறை ஒழிப்பு தினக் கருத்தரங்கு.


சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில்,  சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர்   ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து தெரிவிக்கையில், உலகளவிலும், நமது நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்திடும் பொருட்டு, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலின அடிப்படையில் அனைவரும் சமம் என்ற உணர்வுடன், பெண்களை பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பும் நாம் அனைவரிடத்திலும் இருத்தல் வேண்டும். 


குறிப்பாக, பெண்கள், பெண்களுக்கான அனைத்து உரிமைகள் குறித்தும் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் குறித்தும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான உரிய மரியாதைகளை வழங்கிட வேண்டும். இல்லங்களில் இல்லத்தரசிகளின் பணியினை பகிர்ந்து மேற்கொள்வது குடும்பத் தலைவரின் கடமையாகும். 


குடும்ப சொத்து விபரங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பிரச்சனைகளை, முறையாக எதிர்கொள்வதற்கென பல்வேறு சட்ட வழிமுறைகள் உள்ளன. அச்சமயங்களில் சட்டப்படியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது உரிமைகளை கேட்டு பெற்றிட வேண்டும். 


பொது இடங்கள், பணிபுரியும் இடங்கள் மற்றும் குடும்பங்கள் ஆகியவைகளில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் உள்ளாக்கப்படும் போது, அதனை தைரியமாக எதிர்கொண்டு, காவல்துறை மற்றும் சட்டப்பணிக்குழு போன்றவற்றை அணுகி, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, உரிய தண்டனை வழங்குவதற்கும்,நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 


பணிபுரியும் பெண்கள் சிலர் தனியார் விடுதிகளில் தங்கி பணிபுரிகின்றனர். அப்பெண்களுக்கு எதிராகவும் சில துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டால் ,அதற்கென விடுதிகள் பாதுகாப்பு சட்டம்  உள்ளது. அதன்மூலம் சமூகநலத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்களை பாதுகாப்பார்கள்.

 

பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வகையான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு, பெண் குழந்தைகளின் நலன் காக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஃ ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பாலின சமத்துவம் தொடர்பான பிரச்சனைகளின் மீது தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை என பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றால் தனிநபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை தடை செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. 


பாலின அடிப்படையிலான வன்முறைகளை களைவதற்கான முயற்சிகளில் ஒன்றாக, பாலின பாகுபாடுகளுக்கு எதிராக பாலின வள மையம் மற்றும் மக்கள் அமைப்புகள் மூலம் பிரச்சாரம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினமான இன்றையதினம் 25.11.2022 சர்வதேச அளவில் மாண்புமிகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.


சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரமானது சிவகங்கை மாவட்டத்தில் இன்றையதினம்  தொடங்கி வைக்கப்பட்டு, இதன் தொடர்ச்சியாக வட்டார அளவிலும், ஊராட்சி அளவிலும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், கோலபோட்டி, கருத்தரங்கம் நடத்துதல், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வீடியோப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டு, சர்வதேச மனித ஒற்றுமை தினமான 20.12.2022 அன்று நிறைவு பெற உள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரங்களை மாவட்ட முழுவதும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், இன்றையதினம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கருத்தரங்கின் வாயிலாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சட்டப்பணிகள் குழு, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம், தொழிலாளர்கள் நலத்துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பெண்கள் விழிப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள, சட்ட விதிமுறைகள் ஆகியனக் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.


இதுதவிர, அனைத்து சட்ட வழிமுறைகள் குறித்த கையேடுகளை துறைகள் ரீதியாக ஒருங்கிணைத்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுகளைச் சார்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது கைபேசி  இணைப்பில் வாட்ஸ் ஆப் வாயிலாக பகிர்ந்தளித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தங்களது கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தாங்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.


இந்நிகழ்ச்சியில், பாலின சமத்துவ உறுதிமொழியினை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம். அதன்படி, ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையிலும், ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடின்றி சமமாக நமது குடும்பத்தில் வளர்த்து, பெண்களை உயர்கல்வி கற்பதை ஊக்குவித்து, அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குவதை உறுதி செய்து, பெண்களை போற்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில், விழிப்புணர்வு சுவரொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர், வெளியிட, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.வானதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் வசந்த், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)  கோட்டீஸ்வரி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் திட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் சமுதாய வள பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து  கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad